email: vadamarachy@gmail.com

மேலும்விபரங்களுக்கு

பன்னிரு திருமுறை
பாட்டும் பொருளும்

பஞ்சபுராணம்

பஞ்சபுராணத்தொகுப்பு

நன்றி. சைவ மன்றம், சிட்னி


திருமுறைகள்–→தேவாரங்கள்

 

சைவத் திருமுறைகள்

அறிமுகம்

சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய
சைவ சமய நூல்களின் தொகுப்பாகும்.
இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.

10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை
போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன.
சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.
இவை பன்னிரு திருமுறைகள் எனும் அழைக்கப்பட்டன.

திருமுறை

நூல்

ஆசிரியர்

ஒன்று - மூன்று

தேவாரம்

திருஞானசம்பந்தர்

நான்கு - ஆறு

திருநாவுக்கரசர்

ஏழு

சுந்தரர்

எட்டு

திருவாசகம்,
திருக்கோவையார்

மாணிக்கவாசகர்

ஒன்பது

திருவிசைப்பா

பலர்

திருப்பல்லாண்டு

சேத்தனார்

பத்து

திருமந்திரம்

திருமூலர்

பதினொன்று

பல

பலர்

பன்னிரெண்டு

பெரிய புராணம்

சேக்கிழார் பெருமான்

சமய நிகழ்ச்சிகளின் பாடும் திருமுறைகள்

திருக்கோயில்களில், பூசையின்போது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம் ஓதுவதாகும். அவற்றை ஓதும் வரிசைக் கரம்ம் பின்வருமாறு:-

1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருவிசைப்பா
4. திருப்பல்லாண்டு
5. திருப்புராணம்

இவற்றை ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி,
“வான் முகில் வழாது பெய்க” என்ற கந்தபுராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை.
சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. பஞ்சபுராணத்தொகுப்பு

விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

திருமூலர் (திருமந்திரம்)               

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

ஔவையார் (மூதுரை)               தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

சம்பந்தர்          

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

சம்பந்தர்          

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

திருநாவுக்கரசர்                         

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூ ரருட்துறையுள்
அத்தாவுனக் காளாயினி அல்லேன் எனலாமே

சுந்தரர்     

திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே

மாணிக்கவாசகர்          

திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
        உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
        சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
        அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயை
        தொண்டனேன் விளம்புமா விளம்பே

திருமாளிகைத்தேவர்     

திருப்பல்லாண்டு
பாலுக்கு பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாக
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே

சேத்தனார்     

பெரியபுராணம்
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

சேக்கிழார்     

திருப்புகழ்
ஏறுமயி லேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே

அருணகிரிநாதர்     

சரஸ்வதி பாடல்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணைசெய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்தி லிருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்

பாரதியார்     

வாழ்த்து (கந்தபுராணம்)
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்

கச்சியப்பசிவாச்சாரியார்     

தென் நாடு உடைய சிவனே போற்றி
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நமப் பார்வதி பதையே
அரகர மகா தேவா

இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க

திருச்சிற்றம்பலம்

ஐந்து கைகளுடனும், யானை முகத்துடனும்
சந்திரனின் இளம்பிறை போன்ற நெற்றியை உடைய
சிவனின் மகனை, அறிவுச்சுடரினை
(எனது) மனதில் வைத்து, (அவரது) திருவடிகளை போற்றுகின்றேன்

சொல்வளம் உண்டாகும்; நல்ல சிந்தனை உண்டாகும்; பெருமை பொருந்திய
      செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின்,
அருட்பார்வை உண்டாகும்; அவர் உடம்பு, பிணிகளால்) வாட்டமுறாது.
      (யாருக்கு?) மலர் எடுத்துக்கொண்டு,
பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனியையும், துதிக்கையையும் உடைய
      விநாயகக் கடவுளின், திருவடிகளை,
நாடோறும் தவறாமல், அடைந்துபூசை செய்வோருக்கு,

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே
      உடையவனாய், விடை மீது ஏறி, தூய வெண்மையான பிறையை சூடி,
சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என்
     உள்ளத்தைக் கவர்ந்தகள்வன்
இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல்
      தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த
பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன்
     அல்லனோ!

பெரிய ஆண் யானையின் வடிவோடு அருளை அள்ளி வழங்கும்
அழகிய தனது திருவடிகளை வணங்குபவரது துன்பங்களை
வினாயகக்கடவுள் அவத்தரித்து அருள் புரிந்தார் கொடையில்
சிறந்தவர் திருப்பயில்வலி வலத்தில் குடி கொண்டிருக்கும் இறைவன்


சொற்களுக்கு துணையான அறிவோன் தீப்பிளம்பு வடிவானவன
பொன்போன்ற திருவடியை மன ஈடுபாட்டுடன் வணங்க
கல்லில் கட்டி கடலில் போட்டாலும்
நல்ல துணையாக இருப்பது நமச்சிவாய என்னும் மந்திரமே

பித்தனே, பிறைச்சந்திரனை சூடுபவனே, பெருமானே, அருளோடு ஆள்பவனே
அடியேன் மறவாது நினைக்கின்றேன் மனதில் உன்னை
பெண்ணை நதியின் தெற்கே திருவெண்ணை நல்லூர் துறையில் உள்ளவனே
நான் உனக்கு அடிமையாயினேன் இல்லை எனறு சொல்லலாமோ


தாயே! தந்தையே! உவமை கூறமுடியாதல மணி போன்றவனே!
அன்பினால் உண்டாகும் தெவிட்டாத அமுதமே!
பொய்யாய் காலத்தை வீணாக்கும்
புழுவைவிட கேவலமான எனக்கு
மிகவும் சிறப்பு மிக்க சிவபதத்தை அழித்த
செல்வமே! சிவபெருமானே!
இப்பிறவியில் உன்னை இறுகப் பற்றிக்கொண்டு விட்டேன்
உன்னால் எங்கு போக முடியும்?
நல்ல ஒளிவீசும் விளக்கே அழிவற்ற ஒரு பொருளே
சாதாரண உணர்வால் அறியமுடியாத உணர்வே
தெளிவான பளிங்கு விடும் ஒளிக்கதிர்கள் சேர்ந்து உருவான மணிக்குன்றே
அறிவில் (மூளைக்குள்) தேனாய் இனிப்பவனே
அன்பு பெருகும் மனதில் ஆனந்தத்தை தரும் கனியே
தில்லை அம்பலத்தை நடனம் செய்யும் அரங்காக கொண்டு
நீ ஆடும் தெய்வ திருநடனத்தை
தொண்டனாகிய நான் எப்படி சொல்வதென்று எனக்கு சொல்வாயாக

பால் வேண்டும் என்ற குழந்தைக்கு (புலி்ப்பாத முனிவின் மகன் உபமன்யு)
      பாற்கடலையே கொடுத்த சிவபெருமான்
திருமாலுக்கு (சுதர்சனம் என்ற) சக்கராயுதத்தை கொடுத்து அருள்புரிந்தவன்
      நிலையான தில்லையில் உள்ள
ஆன்றோர்கள் வாழ்கின்ற பொன்னம்பலத்தை இடமாக
கொண்டு நடனம் செய்யும் அருள் புரிபவனுக்கு நாம் பல்லாண்டு வாழ்க
     என கூறுவோம்

உலகம் யாவற்றையும் உணர்ந்து அதை விளக்குவதற்கு அருமையாக இருப்பவனும்
நிலவொளியையும் கங்கை நீரும் நிறைந்திருக்கும் சடையுடையவனும்
அளவிட முடியாத ஒளிமயமானவனும் பொன்னம்பலத்தில் ஆடும் இறைவனின்
மலர் போன்றதும் சிலம்பொலி ஒலிக்கின்ற திருவடியை வாழ்த்தி வணங்குவோம்


மயில் மீது ஏறி விளையாடி வரும் ஒரு முகம்
சிவனுடன் ஞானத்தை பேசும் ஒரு முகம்
அடியவர்கள் கூறும் துன்பங்களை நீக்கும ஒரு முகம்
கிரவுஞ்சமலையை துளைக்க வேலை ஓங்கி நின்ற ஒரு முகம்
விரோதம் கொண்ட சூரனை கொன்ற ஒரு முகம்
வள்ளியை திருமணம் செய்ய வந்த ஒரு முகம்
இவ்வாறு ஆறு முகமாய் நின்றதன் விளக்கத்தை நீ சொல்லி அருள வேண்டும்
ஆதியாய்யுள்ள அருணாசலத்தில் அமர்ந்திருக்கும் முருகப் பெருமானே
வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் சரஸ்வதி
வீணையின் இசையில் இருப்பவள்
மிகுந்த இன்பம் தரும் கவதைகளை
இயற்றும் புலவர்களின் உள்ளத்தில் இருப்பாள்
வேதத்தின் பொருளை தேடி உணர்ந்து
சொல்பவர்களின் உள்ளத்தில் நின்று ஒளி தருவாள்
வஞ்சனை இல்லாத முனிவர்கள் கூறும்
கருணை நிறைந்த வார்த்தைகளின் உட்பொருளாக இருப்பாள்


மேகங்கள் தவறாது மழையை பெய்ய வேன்டும்
வளங்கள் எல்லாம் பெருக வேண்டும், அரசன்
நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும்
உயிரகள் யாவும் நிறைவோடு வாழ வேண்டும்
நான்கு வேதங்களில் சொல்லப்பட்ட தர்மஙகள் வளர வேண்டும்
தன்னலமற்ற நல்ல வழிபாடுகள் பெருக வேண்டும்
பெருமை மிக்க சைவ நீதி
உலகமெல்லாம் பரவ வேண்டும்
தென் நாட்டை உரிமையாக கொண்ட சிவனே போற்றி
எந்த நாட்டில்வாழ்பவர்க்கும் இறைவனாக இருப்பவனே போற்றி

பார்வதியின் கணவன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனே
மறைகளின் (வேதங்களின்) தலைவனே

இன்பம் பரவி
எல்லாரும் வாழ வேண்டும்

 

 

சிவபுராணம் ஒலி வடிவில்

கந்த ஷஸ்ட்டி கவசம் ஒலி வடிவில்

 

 

சிவபுராணம்

சிவபுராணம் - பொருள்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ......


....... வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே


மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே 76

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.
பிறப்பினை நீக்குபவனாகிய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.
தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள)
பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.
கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.
தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்
பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.
எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.
சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.
மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து
உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன்.
சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,
வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,
அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! - உன் பெரிய தன்மைகளை
மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.

புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,
வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !

உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன்.
நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த
உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள்
"ஐயா !" எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி
ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே !

வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.
என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே !
பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,
உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !


தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்,
(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்,
உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.
மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்மமான) பொருளே !
வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !

அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ
அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருந்தாய், எம்பெருமானே !

கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை
மறைத்து மூடிய மாயையாகிய இருளினை
செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி,
மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும்,
அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,
மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை
வைத்துக்கொண்டு மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,

ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்
கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற
நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து,
இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து,
உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,
நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்
பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !

குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே !
ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே !
பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே !
இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,
என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !

தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !
(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே !
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !

அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !
எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !
சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே !
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !
முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்
ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக -
அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின்
பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !

நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !
என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !
தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே! தந்தையே! மிகுதியாக நின்ற
ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து

இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
(ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே !
அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள்
உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே !
என்னை உடைமையாக ஆள்பவனே !
பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க
இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு

போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்
மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது
மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே !
வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !
தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !

அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று
சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து
சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.

திருச்சிற்றம்பலம்

 

 

TOP