திருக்கோயில்களில், பூசையின்போது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம் ஓதுவதாகும். அவற்றை ஓதும் வரிசைக் கிரமம் பின்வருமாறு:-
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருவிசைப்பா
4. திருப்பல்லாண்டு
5. திருப்புராணம்
இவற்றை ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று உ.ம். "ஏறுமயி லேறி விளையாடு முகம்
ஒன்றே" ஓதி,
“வான் முகில் வழாது பெய்க” என்ற கந்தபுராண வாழ்த்து
பாடி நிறைவு செய்வது வழமை.
சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை.
பஞ்சபுராணத்தொகுப்பு
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
திருமூலர் (திருமந்திரம்)
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு
ஔவையார் (மூதுரை)
தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
சம்பந்தர்
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
சம்பந்தர்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
திருநாவுக்கரசர்
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூ ரருட்துறையுள்
அத்தாவுனக் காளாயினி அல்லேன் எனலாமே
சுந்தரர்
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
மாணிக்கவாசகர்
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயை
தொண்டனேன் விளம்புமா விளம்பே
திருமாளிகைத்தேவர்
திருப்பல்லாண்டு
பாலுக்கு பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாக
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே
சேத்தனார்
பெரியபுராணம்
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
சேக்கிழார்
திருப்புகழ்
ஏறுமயி லேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே
அருணகிரிநாதர்
வாழ்த்து (கந்தபுராணம்)
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்
கச்சியப்பசிவாச்சாரியார்
தென் நாடு உடைய சிவனே போற்றி
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
நமப் பார்வதி பதையே
அரகர மகா தேவா
இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க
திருச்சிற்றம்பலம்
ஐந்து கைகளுடனும், யானை முகத்துடனும்
சந்திரனின் இளம்பிறை போன்ற நெற்றியை உடைய
சிவனின் மகனை, அறிவுச்சுடரினை
(எனது) மனதில் வைத்து, (அவரது) திருவடிகளை போற்றுகின்றேன்
சொல்வளம் உண்டாகும்; நல்ல சிந்தனை உண்டாகும்; பெருமை பொருந்திய
செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின்,
அருட்பார்வை உண்டாகும்; அவர் உடம்பு, பிணிகளால்) வாட்டமுறாது.
(யாருக்கு?) மலர் எடுத்துக்கொண்டு,
பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனியையும், துதிக்கையையும் உடைய
விநாயகக் கடவுளின், திருவடிகளை,
நாடோறும் தவறாமல், அடைந்துபூசை செய்வோருக்கு,
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே
உடையவனாய், விடை மீது ஏறி, தூய வெண்மையான பிறையை சூடி,
சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து
என்
உள்ளத்தைக் கவர்ந்தகள்வன்
இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல்
தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த
பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன்
அல்லனோ!
பெரிய ஆண் யானையின் வடிவோடு அருளை அள்ளி வழங்கும்
அழகிய தனது திருவடிகளை வணங்குபவரது துன்பங்களை
வினாயகக்கடவுள் அவத்தரித்து அருள் புரிந்தார் கொடையில்
சிறந்தவர் திருப்பயில்வலி வலத்தில் குடி கொண்டிருக்கும் இறைவன்
சொற்களுக்கு துணையான அறிவோன் தீப்பிளம்பு வடிவானவன
பொன்போன்ற திருவடியை மன ஈடுபாட்டுடன் வணங்க
கல்லில் கட்டி கடலில் போட்டாலும்
நல்ல துணையாக இருப்பது நமச்சிவாய என்னும் மந்திரமே
பித்தனே, பிறைச்சந்திரனை சூடுபவனே, பெருமானே, அருளோடு ஆள்பவனே
அடியேன் மறவாது நினைக்கின்றேன் மனதில் உன்னை
பெண்ணை நதியின் தெற்கே திருவெண்ணை நல்லூர் துறையில் உள்ளவனே
நான் உனக்கு அடிமையாயினேன் இல்லை எனறு சொல்லலாமோ
தாயே! தந்தையே! உவமை கூறமுடியாதல மணி போன்றவனே!
அன்பினால் உண்டாகும் தெவிட்டாத அமுதமே!
பொய்யாய் காலத்தை வீணாக்கும்
புழுவைவிட கேவலமான எனக்கு
மிகவும் சிறப்பு மிக்க சிவபதத்தை அழித்த
செல்வமே! சிவபெருமானே!
இப்பிறவியில் உன்னை இறுகப் பற்றிக்கொண்டு விட்டேன்
உன்னால் எங்கு போக முடியும்?
நல்ல ஒளிவீசும் விளக்கே அழிவற்ற ஒரு பொருளே
சாதாரண உணர்வால் அறியமுடியாத உணர்வே
தெளிவான பளிங்கு விடும் ஒளிக்கதிர்கள் சேர்ந்து உருவான மணிக்குன்றே
அறிவில் (மூளைக்குள்) தேனாய் இனிப்பவனே
அன்பு பெருகும் மனதில் ஆனந்தத்தை தரும் கனியே
தில்லை அம்பலத்தை நடனம் செய்யும் அரங்காக கொண்டு
நீ ஆடும் தெய்வ திருநடனத்தை
தொண்டனாகிய நான் எப்படி சொல்வதென்று எனக்கு சொல்வாயாக
பால் வேண்டும் என்ற குழந்தைக்கு (புலி்ப்பாத முனிவின் மகன் உபமன்யு)
பாற்கடலையே கொடுத்த சிவபெருமான்
திருமாலுக்கு (சுதர்சனம் என்ற) சக்கராயுதத்தை கொடுத்து அருள்புரிந்தவன்
நிலையான தில்லையில் உள்ள
ஆன்றோர்கள் வாழ்கின்ற பொன்னம்பலத்தை இடமாக
கொண்டு நடனம் செய்யும் அருள் புரிபவனுக்கு நாம் பல்லாண்டு வாழ்க
என
கூறுவோம்
உலகம் யாவற்றையும் உணர்ந்து அதை விளக்குவதற்கு அருமையாக இருப்பவனும்
நிலவொளியையும் கங்கை நீரும் நிறைந்திருக்கும் சடையுடையவனும்
அளவிட முடியாத ஒளிமயமானவனும் பொன்னம்பலத்தில் ஆடும் இறைவனின்
மலர் போன்றதும் சிலம்பொலி ஒலிக்கின்ற திருவடியை வாழ்த்தி வணங்குவோம்
மயில் மீது ஏறி விளையாடி வரும் ஒரு முகம்
சிவனுடன் ஞானத்தை பேசும் ஒரு முகம்
அடியவர்கள் கூறும் துன்பங்களை நீக்கும ஒரு முகம்
கிரவுஞ்சமலையை துளைக்க வேலை ஓங்கி நின்ற ஒரு முகம்
விரோதம் கொண்ட சூரனை கொன்ற ஒரு முகம்
வள்ளியை திருமணம் செய்ய வந்த ஒரு முகம்
இவ்வாறு ஆறு முகமாய் நின்றதன் விளக்கத்தை நீ சொல்லி அருள வேண்டும்
ஆதியாய்யுள்ள அருணாசலத்தில் அமர்ந்திருக்கும் முருகப் பெருமானே
மேகங்கள் தவறாது மழையை பெய்ய வேன்டும்
வளங்கள் எல்லாம் பெருக வேண்டும், அரசன்
நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும்
உயிரகள் யாவும் நிறைவோடு வாழ வேண்டும்
நான்கு வேதங்களில் சொல்லப்பட்ட தர்மஙகள் வளர வேண்டும்
தன்னலமற்ற நல்ல வழிபாடுகள் பெருக வேண்டும்
பெருமை மிக்க சைவ நீதி
உலகமெல்லாம் பரவ வேண்டும்
தென் நாட்டை உரிமையாக கொண்ட சிவனே போற்றி
எந்த நாட்டில்வாழ்பவர்க்கும் இறைவனாக இருப்பவனே போற்றி
பார்வதியின் கணவன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனே
மறைகளின் (வேதங்களின்) தலைவனே
இன்பம் பரவி
எல்லாரும் வாழ வேண்டும்